நவாஸ் ஷெரீஃப் மருத்துவமனையில் இருந்து சொந்த இல்லத்துக்கு மாற்றம்     

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மருத்துவமனையிலிருந்து லாகூரிலுள்ள அவரது இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லாகூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நவாஸ் ஷெரீஃப், அந்த நகரின் ஜதி உம்ரா ராய்விண்ட் பகுதியிலுள்ள அவரது இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீஃபின் விருப்பத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக, அவரது இல்லத்திலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிறப்பு மருத்துவக் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நவாஸ் ஷெரீஃபுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக, அவரது இல்லத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பர்கள் எனவும் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைபெற்று வந்த லாகூர் மருத்துவமனையிலேயே உடல் நலக் குறைவு காரணமாக அவரது மகள் மரியம் நவாஸும் சிகிச்சைப் பெற்று வந்தார்.

தற்போது நவாஸ் ஷெரீஃப் தனது இல்லத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் மரியம் நவாஸும் அந்த இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், மருத்துவ காரணங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மரியம் நவாஸுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!