ரவிந்து டில்ஷான் பண்டார சாதனை

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டமெய்வல்லுனர் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்களைப் பதிவு செய்த ரவிந்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் வருடத்தின் அதி சிறந்த பெண் மெய்வல்லுனராக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 24.48 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷெலிண்டா ஜென்சன் தெரிவானார்.

116 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளுக்காக 12, 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 5 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், ஆண்கள் பிரிவில் 27 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

35 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1228 புள்ளிகளைக் குவித்த மேல்மாகாணம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 501 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 437 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.(சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!