யாழ் மாணவன் சாதனை!   

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், யாழ் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ், 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.95 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.95 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் மஹவ விஜயபாகு தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஐ.எல்.பண்டாரவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை நேற்று குறித்த போட்டியில் பங்கேற்றிருந்த மிதுன்ராஜ் முறியடித்தார்.

தேசிய கனிஷ்ட மட்டப் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரிக்கு, பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற மிதுன்ராஜ், இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

இதில், ஆண்களுக்கான குண்டு எறிதலில் 14.76 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவர், ஆண்களுக்கான தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் மிதுன்ராஜுடன் போட்டியிட்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவர்களான அகலங்க விஜேசூரிய வெள்ளிப் பதக்கத்தையும், ஜனித் பொனிபஸ் வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

இறுதியாக நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் பங்குபற்றியிருந்த இவ்விரண்டு வீரர்களும் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!