நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் உருவாக்கப்படும் – கோட்டா!!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று 17 கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி, வடக்கு, தெற்கு, கிழக்கு மேல் மற்றும் மத்திய மலைநாடு ஆகிய அனைத்துப் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதே எனது கருத்தாகும்.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டணியாக இதனைக் கருதுகின்றேன். கூட்டணிக்குள் இருக்கின்ற கட்சிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் நாம் அனைவரும் தாய் நாட்டை நேசிக்கின்ற பொதுவான நோக்கத்திற்காக இணைந்திருக்கின்றோம். எமக்கு பாரிய சவால் உள்ளது.

நாட்டின் இறையான்மை, பாதுகாப்பு மற்றும் ஒற்றையாட்சி, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தை உறுதி செய்தல், சட்ட நிலையை உறுதி செய்தல், விசேடமாக மக்களை வாழ வைப்பதற்கு வறுமையை இல்லாதொழித்தல், சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த சவாலை எமக்கு வெற்றி கொள்ள முடியும். நாங்கள் சவாலை ஏற்று வெற்றி பெற்றவர்கள். ஆகவே மக்களுக்காக நாட்டிற்காக இந்த சவாலை வெற்றி கொள்வது அவசியம்.

வெற்றி பெற்ற பின் அமைக்கப்படும் அரசாங்கத்தின் மீது, இளைஞர் யுவதிகளுக்கு அதீத நம்பிக்கை உள்ளபடியினால், அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் யதார்த்தமான வாக்குறுதிகளே உள்ளன.

அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்தியே, அதனை உருவாக்கியிருக்கின்றோம். ஆகவே வெற்றியின் பின்னர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு, கூட்டணியிலுள்ள கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகின்றேன்.

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பும் அவசியம். உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆதரவு அவசியம். எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி ஊடாக, மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைக்க முடியும்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில், தனிக்கட்சியாக நாங்கள் 56 சத வீத வாக்குகளைப் பெற்ற நிலையிலிருந்தே, ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்கின்றோம். அதனால் யார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!