புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் – அதிகாரப்பகிர்வு உறுதி!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை, இன்று காலை கண்டியில் வெளியிட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்தார்.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, ‘புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப்போவதாக குறிப்பிட்டார்.

நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கண்டி குயீன்ஸ் விடுதியில், தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு இடம்பெற்றது.

இதன் போது, ஜனாதிபதி வேடபாளர் சஜித் பிரேமதாச, தனது உத்தியோகபூர்வ விஞ்ஞாபனத்தை, மும் மத தலைவர்கள், ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசார்ட் பதியுதீன், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் உட்பட முக்கியஸ்தர்களிடம் கையளித்தார்.

இந்த, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 20 சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது,
01. கட்டுப்படியாகும் விலைகள் மற்றும் உயர் தர வாழ்க்கை,
02. 2025 ஆம் ஆண்டில் அனைத்துக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு,
03. அனைவருக்கும் பொதுவான முன்பள்ளிக் கல்வி,
04. பாடசாலை முடிந்த ஒவ்வொரு மாணவனுக்கும், பல்கலைக்கழக பட்டம் அல்லது தொழில்சார் தகமை அல்லது கைத்தொழிற் பயிற்சி வழங்கப்படும்;.
05. இலவச பொதுச் சுகாதாரம்,
06. அமைச்சரவை ஊழலற்ற, தம்மகத்தே முரண் ஆவல்களை கொண்டிராத அமைச்சர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்படும், சொந்தக்காரர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
07. போதைப்பொருள் மற்றும் ஊழலுக்கு எதிரான தீர்க்கமான போராட்டம்,
08. மதத்தீவிரவாதம் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான, தீர்க்கமான போராட்டம்,
09. கடுமையானதும் புத்திசாதூரியதுமான பாதுகாப்பு வியூகம்.
10. பொதுச் சேவையின் நன்மதிப்பு,
11. மக்களுக்கான அரசாங்கம்,
12. நிதிச்சந்தை அதாவது, புதிய தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வரிக் கொள்கை என்பவற்றோடு, துறைமுக நகரத்தில் முதலீடுகளை துரிதப்படுத்தல்,
13. பெண்களுக்குப் புத்தூக்கம்,
14. மாதத்திற்கு 4 மில்லியன் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டும் அனைத்து வணிகங்களுக்கும், பெறுமதி சேர் வரி முற்றாக நீக்கப்படும்,
15. விவசாயிகளுக்கு ஆதாரம், அதாவது விவசாய கூட்டுறவு ஸ்தாபனங்கள் இலவச விதை நெல் மற்றும் உரம் வழங்கல்,
16. சுற்றுச்சூழலும் எரிசக்தியும்,
17. புத்தாக்கம் மற்றும் முயற்சியாண்மை ஊக்குவிப்பு,
18. வேலைச்சந்தைக்கு தயாரான இளைஞர்,
19. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையருக்கு தக்க மரியாதை.
20. பேருந்துகளை நவீன மயப்படுத்தல், புகையிரதப் பாதைகளை மின்வலு கொண்டு இயக்குதல், அதிவேக ரயில் சேவை மற்றும் சிறப்பான போக்குவரத்து முகாமை.

என பல விடயங்களை உள்ளடக்கி, தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சஜித்…

எதிர்வரும் 16 ஆம் திகதி உருவாகும் புதிய யுகத்தில், ஜனநாயக ரீதியில் புதிய பயணத்தை முன்னெடுக்க, சகல மக்களும் கைகோர்க்க வேண்டும் என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, கண்டியில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய இலங்கைக்குள், அதியுச்ச அதிகாரங்களை பகிர்ந்து, மூவின மக்களையும் நாட்டையும் நாம் காப்பாற்றுவதுடன், மக்கள் சுதந்திரம் என்பதை, வெறுமனே அரசியல் அமைப்பில் எழுத்தில் மாத்திரம் உள்ளடக்காது, அது நடைமுறையாகும் வகையில் எமது ஆட்சியை நடத்துவோம்.

புரட்சிகர சமூக அரசியல் பொருளாதார மாற்றம் ஒன்றை உருவாக்ககும் ஆரம்பமே இதுவாகும்.

இந்த நாட்டில், சகல இன மத மக்களின் எதிர்பார்ப்புமே, பொருளாதார பலமும் அரசியல் இஸ்திரமும் கொண்ட பலமான இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

அது எப்போது நனவாகும் என்ற எண்ணமே மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ளது.
மக்களுக்கு புதிய ஒளியை ஏற்படுத்திக் கொடுக்கவும், மக்களுக்கான நல்வாழ்வை உருவாக்கும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி உருவாகும் புதிய யுகத்தில், ஜனநாயக ரீதியில் புதிய பயணமாக இது அமையும் எனலாம்.

எமது தாய் நாடு, எந்த வகையிலும் ஏனைய நாடுகளின் முன்னிலையிலும் அடிபணியாத நாடாகும். எனினும் ஏனைய சர்வதேச நாடுகளின் தனிப்பட்ட கொள்கைக்குள், எம்மை அடக்க முயற்சிக்கும் சூழ்நிலையில், எமது நாட்டின் அரசியல் சுதந்திரம், சகல மதங்கள், இனங்களை பாதுகாத்து, பலமான ஐக்கிய நாட்டை நாம் உருவாக்குவோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!