யாழில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் மகேஸ்!!

முன்னாள் இராணுவத்தளபதியும் ஐனாதிபதி வேட்பாளருமான மகேஸ் சேனாநாயக்கா, இன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள மகேஸ் சேனாநாயக்க, தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய நேற்றையதினம் பல இடங்களுக்கும் சென்று, பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, ஐனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்கா,

வடக்கு தெற்கு என்ற பிரிவினை இல்லாமல், அனைத்து மக்களும் ஒரே குடும்பம் போன்று ஒற்றுமையாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நாட்டில் வடக்கு, தெற்கு, இன, மத ரீதியான பிரிவினைகள் இருக்கக் கூடாது. அவ்வாறான பிரிவினைகளைக் கடந்து, அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பம் போன்று வாழ வேண்டும்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

இன்றைக்கு அரசியலில் இருக்கின்ற தரப்புக்களினால் செய்ய முடியாததை, அரசியல் கட்சி சாராமல் செய்வதற்கு நாங்கள் முன்வந்திருக்கிறோம். அதற்கமைய எங்களது கொள்கை நிலைப்பாடுகளை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றோம்.

அதன் தொடராகவே யாழ்ப்பாணத்திற்கும் வந்து எமது நிலைப்பாட்டை பல வழிகளிலும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். இந்த நாடு பல்வேறு கஷ்ர துன்பங்களில் இருந்து மீண்டு வருகின்றது.

இந்த நாட்டையும் நாட்டிலுள்ள மக்களையும் பாதுகாத்து, அவர்களை மீட்டெடுத்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்புவதற்காக நாங்கள் முன்வந்துள்ளோம்.

ஆகையினால் இந்த நாட்டை முன்னேற்றி, மக்களின் வாழ்வை வளப்படுத்தும் எமது திட்டங்களுக்கு ஆதரவை வழங்கி, எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் எனக் கோருகின்றோம். அதனூடாக, எமது எதிர்கால சந்ததி சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த கால யுத்தம் காரணமாக பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தக் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது. எனவே அந்த மக்களுக்கு, அவர்களுடைய காணிகள் அல்லது இழப்பீடுகளை வழங்கி, அவர்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, விவசாயம், மீன்பிடி ஆகிய விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்து, மக்களின் வாழ்வை வளப்படுத்துவதுடன், யாழ்ப்பாணத்தையும் முன்னேற்றி, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு எங்களுக்கிடையில் பேதங்களின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!