வவுனியாவில், வீதி ஒன்றை தனிநபர் கைப்பற்றியமைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!!

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில், வீதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைக்கு, நகர சபை தலைவர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து, இருவர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்கும், கிராமத்திற்கும் இடையில் செல்லும் வீதியை, தனி நபர் ஒரு ஒருவர் ஆக்கிரமித்து வீடு அமைப்பதாகவும், வீதியை போக்குவரத்து செய்வதற்கு ஏற்ற வகையில், நகர சபை சீர்செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, பாதிக்கப்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, கடந்த 28 வருடங்களாக இவ்விடத்தில் வசித்து வருவதாகவும், நகர சபை தவிசாளர், இப்பகுதியால் முச்சக்கரவண்டி செல்லும் வகையில், வீதிக்கு இடம் விடுமாறு கோரியதை அடுத்து, வேலியை அகற்றி இடத்தை விட்டுக் கொடுக்கவுள்ளதாகவும், பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நகர சபைக்கு சொந்தமான இப்பாதை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு, நகர சபையில் அனுமதி பெறப்படவில்லை எனவும், நகர சபை யாருக்கும் பக்க சார்பாக நடந்து கொள்ளவில்லை எனவும், வவுனியா நகர சபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

அத்துடன், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதரங்களை அடிப்படையாக கொண்டு, நகர சபை செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பு பகுதிகள் மீளப் பெறப்பட்டு, நிரந்தரமான பாதை அமைக்கப்படும் எனவும், நகர சபை தவிசாளர் குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!