வாக்குகளை நியாயமாகப் பயன்படுத்துங்கள் – நாமல்!!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேரத்லில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நியாயமாக பயன்படுத்த வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களாகிய நீங்களே உங்களுக்குக் கிடைத்துள்ள அதி உன்னதமான ஜனநாயக உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தி, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முழு உரித்துடையவர்கள் என்பதை உங்களிடம் வினயமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சில தீய சக்திகளே பல்வேறுபட்ட திரிவுபட்ட கருத்துக்களைக் கூறி, உங்களைக் குழப்பி, தமிழர்களின் வாக்குக்களைச் சிதறடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதை எம்மால் உணர முடிகின்றது. அவர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில், உங்கள் வாக்குகள் அமைய வேண்டும்.

தமிழர்களிடம் உள்ள பலம் வாக்குப் பலமாகும். தமிழராகிய நீங்கள் வாக்களித்து உங்கள் பலத்தை நிரூபித்து, அதன் ஊடாக உங்கள் தேவைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றக்கூடிய பாரதீனப்படுத்த முடியாத ஜனநாயக உரித்துடையவர்கள்.

நீங்கள் தேர்தல்களில் எவ்வளவு ஈடுபாடு உடையவர்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது. உங்கள் பகுதிக்கு வரும் போதும், நான் காணும் பலருடன் பேசும் போதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதில் நீங்கள் மிகச்சிறந்த உறுதியுடன் உள்ளமையை நான் அறிவேன்.

அப்படிப்பட்ட உங்களைச் சிலர் பிழையாக வழி நடாத்த முயற்சிக்கின்றமை எமக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது. அது மட்டுமல்லாது இலங்கையின் தேர்தல்களில் நீங்கள் ஈடுபாடற்றவர்கள் என்பதை சர்வதேச நாடுகளுக்குக் காட்டி, உங்கள் மட்டில் வெளிநாடுகள் வைத்துள்ள நன்மதிப்பைக் குறைக்க வேண்டும் என்பதிலும் சிலல் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

அவர்களை இனம்கண்டு உறுதியுடன் நீங்கள் வாக்களிப்பது காலத்தின் கட்டாயம். இன்று நீங்கள் இவ்வளவு சுதந்திரத்துடன் நடமாடுவதற்கான காரணம் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.

2009 ஆம் ஆண்டு இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச எடுத்த திடமான முடிவின் பலனாகவே, இன்று முழு இலங்கையும் அமைதிக் காற்றை சுவாசிக்கின்றது.

இதேவேளை, தமிழ் மக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த முடிவெடுக்க வேண்டிய தார்மீக உரிமை உண்டு.

நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் உங்கள் தீர்ப்பை தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு பிறக்கும் எமது புதிய ஆட்சியில் உங்களுக்கான சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்துடையவர்கள் நீங்கள் என்பமை நாம் உறுதிப்படுத்துவோம். சிந்தித்து செயற்படுங்கள். என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!