மலையகத்தில் தனி வீடா? மாடி வீடா ? அதை தீர்மானிக்கும் தேர்தல் இது-திலகர்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து மலையக மக்கள் வென்று எடுத்த எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும் தனிவீட்டுத் திட்டங்கள், புதிய கிராமங்கள் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மறுதலிக்கும் வகையில், மொட்டு கட்சி மாடி லயன் முறைமையை மீண்டும் கொண்டுவரப்போவதாக அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மலையகத்துக்கு மாடி லயம் வேண்டுமா ? தனிவீடு வேண்டுமா? என தீர்மானிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமையவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி யின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து உடபுசல்லாவை நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் சுஜிகலா தலைமையில் பிரதேச சபை உறுப்பினர், ஐ.தே.க கட்சி , சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர் தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று ஒக்டோபர் 30 ம் திகதி கடந்த வருடம் இதே நாளில் தனது தாத்தாவின் சிரார்த்த தினத்தில் ஆயிரம் ரூபா கொடுக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் என அறிவித்த ஒருவர் திருடப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சர் ஆனார். அவருக்கு சரியாக பெயரை வைத்துள்ளார்கள்.ஒரு முகம் இரண்டு முகம் இல்லை ஆறு முகம்.அந்த முகம் கடந்த ஐந்து வருடங்களாக காட்டிய முகங்களை நாம் மீட்டிப் பார்க்க வேண்டும் . 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றிலை, பொதுத் தேர்தலில் மைத்ரி வெற்றிலை, 2017 உள்ளூராட்சி தேர்தலில் ஆரம்பிக்கும்போது சேவல் – வெற்றிலை முடியும்போது சேவல் – மொட்டு. இந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பத்தில் அன்னம் – சஜித், மொட்டு – கோட்டா என 32 ஐ தூக்கி கொண்டு அலைந்த முகம் தான் அந்த ஆறுமுகம். இறுதியாக அந்த 32 லும் இல்லாத 33 வது விடயமாக இப்போது மாடி லயம் வருகிறது.

மலையக மக்களின் வரலாறு முழுவதும் காணி உரிமை மறுக்கப்பட்ட மக்களாகவே இருந்து வந்துஉள்ளனர். ஒரு அடி நிலத்தை தனது வீட்டுத் தேவைக்காக பயன்படுத்தினால் கூட வேலையை இழக்க வேண்டிய நிலை தோட்டத் தொழிலாளருக்கு ஏற்பட்டது. அந்த நிலையை மாற்றி தோட்ட சமூகமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏழு பேரச்சஸ் காணி என்பதை அரசாங்கத்தின் கொள்கையாக கொண்டுவந்து இன்று பரவலாக அதனைப் பெற்று கொடுத்து வருகிறோம். அத்தகைய காணிகளுக்கு காணி அமைச்சின் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக முழுமையான காணி உறுதியையும் பெற்றுக் கொடுத்து வருகிறோம். இந்த நிலையிலேயே கடந்த நான்கு வருட காலமாக நாம் வென்றெடுத்த மலையக மக்களின் நில உரிமையை விட்டுக்கொடுக்க போகிறோமா அல்லது தனிவீடும் புதிய கிராமங்களும் வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இதனை பார்க்க வேண்டியுள்ளது. இந்த மாடி லயத்தை முன்னெடுத்தவர்கள் மாடி லயத்தின் ஸ்தாபகர்கள். அவர்களது யோசனையே கோட்டா வின் விஞ்ஞாபனத்தில் வெளிப்பட்டுள்ளது. எனவே மொட்டை மட்டுமல்ல மொட்டுக்கு முட்டுக் கொடுக்கும் மலையக கட்சிகள் பற்றியும் நாம் அங்கீகரிக்க போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. எனவேதான் அந்த முகம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன போது நான் பாராளுமன்றில் அதற்கு பதில் அளித்தேன்.அதுதான் உங்கள் முடிவு என்றால் அதனைக் கட்டாயம் செய்யுங்கள் அதுதான் மலையகத்தின் விடிவு என்றேன். அவர் அவ்வாறு சொன்னது போல் செய்யவில்லை. மாறாக எமது அமைச்சர் வகித்த மலைநாட்டு புதிய கிராம அமைச்சில் வெட்கமின்றி உட்கார்ந்து இருந்தார்.எனினும் அந்த ஆசனத்தில் இருந்து சட்ட ரீதியாக அகற்றினோம். அவர் பாராளுமன்ற பதவியில் இருந்தும் விலகி இருந்தால் இன்று மீண்டும் மாடி லயத்தை கொண்டு வரும் திட்டம் அரங்கேறாது என்றும் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!