வசீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு-கொழும்பு மேல் நீதிமன்றம்

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நிதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை திறந்த நீதிமன்றம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தான் நிரபராதி என பிரதிவாதி பேராசிரியர் ஆனந்த சமரசேகர திறந்த நீதிமன்றம் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் குறைப்பாடுகள் காணப்படுவதாக பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் இதற்கு முன்னர் அடிப்படை எதிர்ப்பு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு தொடர்பில் இன்று உத்தரவொன்றை பிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை எதிர்ப்பு மனு அடிப்படையானது என தெரிவித்தார்.

அதன்படி, குற்றப்பத்திரிக்கையை திருத்த சட்டமா அதிபருக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு குற்றப்பத்திரிக்கையை திருத்தவில்லை என்றால் பிரதிவாதியை விடுவிக்க நேரிடும் என குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க, குறித்த குற்றப்பத்திரிக்கையை திருத்துவதாக தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதிக்கு வாசித்து காட்டப்பட்டதன் பின்னர் வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!