வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் ஃபெர்கஸ் ஆல்ட் ஒபேக்குமிடையிலான சந்திப்பு லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர், பல சவால்களுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்து வருதையும் குறிப்பிட்டார்.
அத்துடன் வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையை நோக்கி மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பிரித்தானிய அரசின் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் இதன்போது கோரினார்.
இதேவேளை, கடந்த மாதங்களில் வடமாகாணத்தின் அபிவிருத்தியிலும் கட்டமைப்பிலும் ஏற்பட்டுவரும் மாற்றத்தை வரவேற்பதாக குறிப்பிட்ட ஃபெர்கஸ், வடமாகாணத்தில் மெதுவாக உருவாகிவரும் இந்த மாற்றம் இலங்கையின் ஜனநாயகத்தின் மீது காணப்படும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனநாயகத்தை எப்போதுமே நம்பி செயற்படும் நாடென்ற ரீதியில், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பிரித்தானியா எந்நேரத்திலும் உதவிசெய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.