யுத்த வெற்றியை தனி நபர் கொண்டாட முடியாது – மகேஸ்!!

கடத்தல் காணாமலாக்கப்படுதல், தாக்குதல்கள் என்பவற்றை, இராணுவமோ பொலிஸாரோ, அரசோ செய்யவில்லை என்றும், அதனை குழுக்களே செய்திருக்கலாம் என்றும், முன்னாள் இராணுவத் தளபதியும் ஐனாதிபதி வேட்பாளருமான nஐனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனக்கு இந்த இடம் புதிதல்ல. இங்குள்ள மக்களுக்காக இந்தப் பிரதேசத்தில் நான் கடமையாற்றி இருக்கிறேன். இங்குள்ளவர்களின் பிரச்சினைகள் தேவைகள் எனக்கும் தெரியும்.
ஆகையினால் அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த பல வருடங்களாக நான் இராணுவத்தில் இருந்திருக்கின்றேன். இராணுவத்தில் இருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றி இருக்கிறேன். இப்போது தேர்தலில் போட்டியிட்டு, நாட்டுக்கு இன்னும்; சேவை செய்யவே நான் வந்திருக்கிறேன்.

நாட்டு மக்கள் அரசியல்வாதிகளால் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சிங்களவர், தமிழர், முஸ்லிம் என இன ரீதியாகவும், அதேநேரம் இந்து, பௌத்தம், இஸ்லாம் என மத ரீதியாக ஆட்சியார்களால் பகுக்கப்பட்டு பல பிரிவுகள் காணப்படுகிறது.

இந்த நாட்டில், ஆரம்ப காலத்தில் இருந்து ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தான், யுத்தத்திற்கு நாட்டை இட்டுச் சென்றது. இதனாலேயே கடந்த 30 வருடமாக நாட்டில் யுத்தமும் நடைபெற்றது.
இதனால் தமிழர் சிங்களவர் என இரண்டு பக்கத்திலுள்ளவர்களுக்கும் போராட்டமாகவே வாழ்க்கை அமைந்தது.

ஆகவே இந்தப் பிரிவினைகளில் இருந்த விடுபட்டு வடக்கு தெற்குக்கு இடையில் பாலம் அமைத்து, அனைவரும் ஒன்றாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை ஏனையவர்களை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும்.

ஏனெனில் கடமையில் இருந்த காலத்தில், நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் மக்கள் அரசியல்வாதிகளின் பின்னால் சென்றதால், இன்று அழுதுகொண்டு இருக்கின்றனர்.

ஆனால் நான் ஒரு சுயேட்சை வேட்பாளர். எனக்கு கட்சி இல்லை. நான் நாட்டின் அரசியல் வாதியும் அல்லன். நான் நாட்டின் சேவையாளன். இந்தத் தேர்தலுக்காக எங்களிடமுள்ள பணத்தையே நாங்கள் செலவு செய்து வருகிறோம்.

இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பு கல்வி போன்றவற்றையே கேட்கிறார்கள். யுத்தத்தின் போது கல்வி பெரியளவில் பாதிக்கப்பட்டு காணப்பட்டது. இளைஞர்கள் தொழில் இல்லாமல் வாழ்க்கை நடாத்துகிறார்கள்.

யுத்தங்களுக்கு முற்பட்ட காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வடக்கில் காணப்பட்டன. இன்றைக்கு அவற்றைக் காண முடிவதில்லை. நாங்கள் மக்களின் காணிகளை கையளித்துள்ளோம்.
மிதி வெடிகளை அகற்றியுள்ளோம்.

யுத்தத்தால் பாதிப்பு, 13 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கியுள்ளோம். இது மட்டுமல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் எமக்குத் தெரியும் என்றும், அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பொம் என்றும் நாம் கூறுகின்றோம்.

குறிப்பாக காணிப் பிரச்சினையில் 92 வீதமான அரச காணிகளும், 80 வீதமான தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது 3000 ஆயிரம் ஏக்கர் விடவிக்கப்படாமல் உள்ளது.
அது இராணுவ முகாமோடு சுற்றியுள்ள பிரதேசம்.

அந்தப் பிரதேசத்திற்குள் தான், பலாலி விமான நிலையம் அமைந்து காணப்படுகிறது. அதனால் அதை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே அந்தக் காணியின் உரிமையாளர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் நஸ்ர ஈடு வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் கடத்தல், காணாமல் செய்யப்பட்டது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது போன்ற விடயங்கள் இடம்பெற்றது துரதிஸ்ரவசமானது. இதனை இராணுவமோ பொலிஸாரரோ ஏன் அரசோ செய்யவில்லை.

ஏனெனில் அரசோ பொலிசோ இராணுவமோ இவற்றைச் செய்ய அதிகாரம் இல்லை. ஆகவே அது குழுக்களாலேயே செய்யப்பட்டிருக்கலாம். நான் ஆட்சிக்கு வந்தால் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதேநேரம் இப்போது எடுக்கப்படுகின்ற விசாரணைகளையும் வேகப்படுத்துவேன். அந்த விசாரணை நடவடிக்கைகளின் போது கட்சிகளோ அல்லது நபர்களோ கணக்கில் கொள்ளப்பட மாட்டார்கள்.
மேலும் நான் முப்பது வருடமாக இராணுவத்தில் தொண்டாற்றி இருக்கிறேன்.

இந்த நேரத்தில், இன்றைக்கு யுத்தத்தை வெற்றி கொண்டது தொடர்பாக பலரும் பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுபவர்கள் சில காலம் தான் இராணுவத்தில் பணியாற்றி இருக்கின்றார்கள்.
ஆகவே யுத்த வெற்றி என்பது தனி நபர் வெற்றியல்ல. அது எல்லோரும் இணைந்த வெற்றியாகவே காணப்படுகிறது.

அதாவது சமூக மட்ட தலைவர்கள், சமய தலைவர்கள், பொது மக்கள் என அவனைவரும் இணைந்து பெற்றுக் கொண்டதுதான் யுத்த வெற்றி. அவ்வாறு ஏல்லோருமாக இணைந்து பெற்ற வெற்றியை தனி நபர்கள் உரிமை கொண்டாட முடியாது. என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!