நாட்டின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு – சஜித்!!

மக்களுக்கும் ஜனாதிபதிக்குமான ஒற்றுமையான சிறந்த நிர்வாக கட்டமைப்பு, பிரதேச செயலகங்கள் ஊடாக உருவாக்கப்படும் என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த பிரதேசத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இருக்கிறார்கள். நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாக இருக்கின்றேன்.

அந்த வகையில் உங்களது கஷ்ட துன்பங்களை விசேடமாக நான் உணர்ந்தவனாக இருக்கின்றேன். அதனால், கஷ்ட துன்பங்களுக்கு மத்தியில் வாழுகின்ற மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

சஜித் பிரேமதாஸ ஆகிய நான் உங்களது வாழ்வை வளம் மிக்கதாக மாற்ற ஒருபோதும் பின்னிக்க போவதில்லை என்பதை, இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

உலகில் எந்த நாடும், யுத்தத்தின் பின்னர், சமாதானம் வந்ததும், சர்வதேச ஆதரவாளர்களை அழைத்து, சர்வதேச விடயங்கள் தொடர்பாகவும், உள்ளக விடயங்கள் தொடர்பாகவும், பல விடயங்களை மேற்கொள்கின்றார்கள்.

அந்த வகையில், உகாண்டா உள்ளிட்ட பிரதேசங்களில் இது போன்ற விடயங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த பிரதேசம் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக காணப்படுகிறது.

ஆகவே எங்கள் ஆட்சி வந்ததும், வடக்கிற்கு வேறாகவும், கிழக்குக்கு வேறாகவும் சர்வதேச ஆதரவாளர்களை அழைத்து, சர்வதேச நிகழ்வுகளை நடாத்தி, வடக்கிற்கு வேறாகவும், கிழக்குக்கு வேறாகவும் சர்வதேச ஆய்வு மையங்களை ஏற்படுத்தி, இந்த பிரதேசத்தை, அபிவிருத்தியின் ஒரு கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை செய்வேன் என உறுதிபட கூறுகிறேன்.

ஜனாதிபதி தேர்தல் நடக்கின்ற பொழுது, வேட்பாளர்கள் மேடைக்கு வருவார்கள் போவார்கள். வெற்றியீட்டிய பின்னர் ஜனாதிபதியாக மாறுகின்றார்கள்.
அதன் பின்னர் வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் என்னுடைய ஆட்சியில் 332 பிரதேச செயலகங்களிலும், ஜனாதிபதி மையம் என்ற ஒன்று உருவாக்கப்படும். இதன்மூலம் வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதிக்குமான ஒற்றுமையான சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை நான் உருவாக்கித் தருவேன்.

இந்த பிரதேசத்திலே வாழுகிற மக்களுக்கு, நியாயமான முறையிலே இலவசமாக பசளைகளை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கின்றேன். பெருந்தோட்ட பயிர் செய்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக, பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பேன்.

இதன் மூலமாக உர உற்பத்திகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். உர உற்பத்தி, கிராமம் தோறும் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது, தேசிய உற்பத்தி அதிகரித்து செல்லும்.

தேசிய உற்பத்தி அதிகரித்து செல்லும் போது, மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். அதுமட்டுமல்லாமல் கடந்த மஹிந்தவின் அரசாங்கம் பெற்ற கடனை நிவர்;த்தி செய்வதற்காக, இந்த ஆதாயத்தை மேற்கொள்வதற்காக நடவடிக்கைகளை எடுத்து, இந்த நாட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்ற உணவு உற்பத்திகளை நிறுத்தி, உள்நாட்டு உணவு உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை என்னுடைய அரசாங்கத்தில் எடுப்பேன்.

இளைஞர் யுவதிகளுக்கான ஒரு புதிய வேலைத்திட்டத்தை, என்னுடைய அரசாங்கத்திலே எடுப்பேன். தகவல் தொழில்நுட்ப கல்லூரி, ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் அமைக்கப்படும்.

இதன் மூலம் உங்கள் இளைஞர்கள், அனைத்து தகவல் தொழில்நுட்பங்களையும், இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி, வேலை இல்லாமல் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு, நிச்சயமாக வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பேன்.
என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ உருவாக்கிய, ஜனசவிய வேலைத்திட்டத்தினையும் உங்களுக்கு நான் வழங்குவேன்.

எதிர்வரும் 16 ஆம் திகதி என்னை ஜனாதிபதி ஆக்கினால், பாடசாலை மாணவர்களுக்கு 2 சீருடைகளும், பாதணியும், மதிய உணவு உள்ளடங்கலாக, ஒட்டு மொத்தத்தையும் என்னுடைய அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும்.

அதேபோல் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான சம்பளத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்துவோம். பெண்கள் உரிமைகளை சட்டமயமாக்கி, அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையையும், நாங்கள் எடுப்போம்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு, சகல குடும்பங்களுக்கும் வீட்டு பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, சகல குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும்.
அத்துடன், வவுனியா பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும், இந்த இடத்திலே நான் பொறுப்பெடுத்து, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருகின்றேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!