கோட்டா 65 வீதமான வாக்குகளை பெறுவார் – மஹிந்த!!

நாட்டில் அச்சமற்ற சூழலை உருவாக்க, மக்கள் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து, இன்று மாலை கண்டி – ஹங்குரங்கெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தந்தை செய்ததையே தானும் செய்வதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். ஐயோ அப்படியென்றால் அவற்றை செய்ய வேண்டாம். 88, 89 களில் பிரேமதாஸவின் யுகத்தில் 7 ஆயிரத்து 652 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 416 பேர் கொலை செய்யப்பட்டனர். அங்குரங்கெத்த, வலப்பனை போன்ற பகுதிகளிலும் படுகொலை செய்யப்பட்டவர்கள் இந்தத் தொகையில் உள்ளடங்குகின்றனர்.

எமது பிரதேசத்திலும் டயர் எரிப்பு மூலம் பலர் கொலை செய்யப்பட்டனர். வெள்ளை வான் குறித்து பந்துல குணவர்தன நேற்று நூல் ஒன்றையும் இதுகுறித்து வெளியிட்டிருந்தார்.

பிரச்சினையை தீர்ப்பதற்காக கொலை செய்த யுகமே அது. அதனால் பிரேமதாஸ யுகத்திற்கு நாங்கள் பயப்படுகின்றோம். பிரேமதாஸவிடம் கேள்வி எழுப்பிய சுயாதீன ஊடகவியலாளரை தாக்கினார்கள்.

இன்றுவரை அவர் எங்கே என்று தெரியவில்லை. ஆகவே தந்தை செய்ததை விடவும் சஜித் என்ன செய்வார் என்றுதான் அஞ்சுகின்றோம். எனவே கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியது, எனது தனிப்பட்ட யோசனை அல்ல. மகாநாயக்க தேரர்கள், கட்சித் தலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலருடனும் பேச்சு நடத்தியே முன்நிறுத்தியிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, இந்த தேர்தலை எதிர்கொண்டு 60 தொடக்கம் 65 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமக்கு முதலில் நாடு அவசியம். நாடு இல்லாவிட்டால் அல்லது நாடு பிளவுகளுக்கு உட்பட்டிருந்தால், பாதுகாப்பு இல்லாவிட்டால் எமக்கு இருக்கும் பிரச்சினை என்ன?

இன்று பாடசாலை, ஆலயங்கள் மட்டுமல்ல, கண்டி தலதா பெரஹரவுக்கும் செல்ல முடியாத நிலைமை உள்ளது. முதற் தடவையாக விகாரைகள், கோவில் மற்றும் ஆலயங்களுக்கு செல்ல அச்சமடைந்த யுகம் இதுதான்.

30 வருடமாக போர் நிலவியது. அப்போது தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் அங்கு செல்ல மக்கள் அச்சமடையவில்லை.
ஸ்ரீமா போதி மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் மக்கள் அங்கு சென்றனர்.

இருந்தாலும் சஹ்ரானின் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டு, அச்சநிலை உருவாகியது. இதற்கு ரணில் – சஜித் தலைமையிலான அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்பட்டன. தாக்குதல் நடத்தும் நபர்களின் தொலைபேசி இலக்கம், முகவரி, புகைப்படங்கள் கிடைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அமைச்சர் ஒருவருக்கு அவரது தந்தை கூறியிருந்தார் ஆலயம் செல்ல வேண்டாம் என்று. ஆனால் அந்த தகவல் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த பிழையான தீர்மானத்தினால், நாட்டின் ஸ்திரத்தன்மை, தேசிய பாதுகாப்பு என்பன இழக்கப்பட்டு விட்டன.
அச்சம், சந்தேகமற்ற சூழலை உருவாக்குவதற்காக, மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!