நலத்திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு     

சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தொலைத்தொடர்பு தொழிநுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பதுளை மாவட்டத்தில் உள்ள கிராந்துருக்கோட்டை மாவட்ட வைத்தியசாலையுடன் இணைந்ததாக 89 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளிகளை வலுவூட்டும் பொருளாதார நலன்பேணல் கல்வித் தகவல் மையம் ஜனாதிபதியால் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்தினூடாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிராந்துருக்கோட்டை பிரதேசம் சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள பிரதேசம் என்பதுடன், அந்த நோயாளிகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய திட்டங்களுக்காக தனியான விசேட பிரிவொன்று இல்லாதிருந்தமை ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது.

இந்த குறைபாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் குறித்த மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியினதும் பல்வேறு நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்புடன் இலங்கை கடற்படையினரின் மனிதவள பங்களிப்புடன் அநுராதபுரம், புத்தளம், குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மிகிந்தலை வேளுசுமண ரஜமகா விகாரை, பதவிய ருவன்புர மகா வித்தியாலயம், பலாகல கிரிந்திவத்த ஆரம்ப பாடசாலை, திரப்பனை அளகொல்லேவ புனித அந்தோனியார் வித்தியாலயம், மஹகும்புக்கடவல கிவுலக்கெலே மகா வித்தியாலயம், ஆனமடுவ கரம்பேவ ரஜமகா விகாரை, ஆனமடுவே விஹாரகம வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி மற்றும் குருணாகல் மலியதேவ முன்மாதிரிப் பாடசாலை, கண்டி தர்மராஜ கல்லூரி ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாரிய அனர்த்தமாக மாறியுள்ள சிறுநீரக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக விசேட கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி, சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியை அமைத்ததுடன், இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய்த் தாக்கமுள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட குறுகிய காலத் தீர்வாக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வழங்குதல் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதுடன், 824 மில்லியன் ரூபா செலவில் நாடளாவிய ரீதியில் சுமார் 611 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, சுகாதார அமைச்சு மற்றும் சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!