சிங்கள தேசத்தின் தேர்தலை தமிழர் தேசத்திற்கான தேர்தலாக மாற்றுவோம்:எம்.கே.சிவாஜிலிங்கம்


சிங்கள தேசத்தின் தேர்தலை தமிழர் தேசத்திற்கான தேர்தலாக மாற்றுவோம் என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதை கனவிலும் காண்பது தவறு என்று குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பலரது முயற்சி வீண்போகக்கூடாது என்பதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், சிவில் சமூக பிரமுகர்கள், மதத் தலைவர்கள் பலரும் ஒன்றிணைந்து, தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அந்த முயற்சி இறுதி நேரத்தில் தோல்வியடையும் நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறானதொரு சூழலில் அந்த முயற்சி தோல்வியடைந்துவிடக் கூடாது, அவர்களின் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

பிரதான சிங்கள வேட்பாளர்கள் எவருமே தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் எதனையுமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை கூறவேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாகவும், இதனை தமிழ் மக்கள் தவறவிடமாட்டீர்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியத்தை மனதில் நிறுத்தி, மீன் சின்னத்திற்கு நீங்கள் போடும் ஒவ்வொரு புள்ளடியும் தமிழ்த் தேசியத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எமது வாக்குகளால் சிங்கள தேசத்திற்கு பதில் கூறுவதுடன், சிங்கள தேசத்தின் தேர்தலை தமிழர் தேசத்திற்கான தேர்தலாக மாற்றுவோம் என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!