மேற்கு ஆசிய நாடான ஈராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி வயது 48 இவர், 2014-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம், அடுத்தடுத்து உலகத்தின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. இதனால், அல் பாக்தாதி மிகக்குறுகிய காலத்திலேயே பிரபலமாகினார்.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது . அல் பாக்தாதி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். அவரைப்பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ.177 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
மேலும் இந்நிலையில், சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அல் பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். குண்டு வெடித்ததால், சுரங்கத்தின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளை அகற்றி விட்டு, அல் பாக்தாதியின் உடல் பாகங்களை அமெரிக்க படையினர் சேகரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க சிறப்பு படையினரின் இந்த தாக்குதல் முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வெள்ளை மாளிகையின் ஒரு விசேஷ அறையில் இருந்தபடி, அவரும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் அதை நேரலையில் பார்த்தனர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபு பக்கர் அல் பாக்தாதியின் உடலை அமெரிக்க ராணுவத்தினர் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்த கடல் பகுதியில் வீசப்பட்டது? எந்த நேரம் வீசப்பட்டது? என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலும் கடலில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.(சே)