மடு திருத்தலம் புனித பூமியாக பிரகடனம்.

மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார் .

குறித்த நிகழ்வில் பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் .

மேலும் கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக விளங்கும் மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாக விளங்குவது விசேட அம்சமாகும். மடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது மாத்திரமன்றி, வருடம் பூராகவும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலட்சக்கணக்கில் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கடந்த கால யுத்தத்தின்போது பெரும் பாதிப்புக்குள்ளானதுடன், நீண்ட காலமாக முறையான பராமரிப்பும், புனரமைப்பும் மேற்கொள்ளப்படாதமையினால் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது

இதற்கமைய அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து, வீதி வசதிகள், நீர்வழங்கல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வணக்கஸ்தலத்திற்கு வருகை தரும் மக்களுக்கான தங்குமிட வசதிகள், ஓய்வு மண்டபங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு விசேட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக திருத்தலத்தை சூழவுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பு தேவாலயத்தின் சமய நடவடிக்கைகளுக்கான கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பாதுகாப்பதற்கும் உரிய வர்த்தமானியினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!