ஓமான் வளைகுடாவில் எண்ணைக் கப்பல்கள் மீது தாக்குதல் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து, சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது. பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல், தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கப்பல் நீரில் மூழ்கி விட்டது என, ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், மற்றொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை, கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, எண்ணைய்க் கப்பல்களை இலக்கு வைத்து, டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல்கள் கடல் கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில், நான்கு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு, ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே, இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து, எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளது. (சி)