மீண்டும் 30ம் திகதி தமிழ் கட்சிகளின் கூட்டு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழர் தரப்பின் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில், தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும், அதற்கான இறுதி முடிவு, நாளை மறுதினம் எடுக்கப்படும் எனவும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

5 தமிழ் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பரமேஸ்வரா பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.
இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல், சுமார் மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உருப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்தன், ரெலோ சார்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் கென்ரி மகேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் ஊடக பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,..
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம்.

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தேசியக் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டது.

ஏனெனில் எமது கோரிக்கைகள் என்பது, ஒரு நாட்டுக்குள், தமிழர்களுக்கு இனப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய விதமாக மட்டுமல்லாது, தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளை தீர்ப்பதற்கே கோரிக்கைகளை முன்வைத்தோம்.

ஆனால், தென்னிலங்கையில் உள்ள பிரதான தேசியக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள், எமது கோரிக்கைகளை, இனவாத கோரிக்கைகளாக பூதாகரமாக காட்டுகின்றனர்.

இந்தக் கட்சியினர், எமது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில், தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.
எமது 5 கட்சிகள், நாளை மறுதினம் கூடி ஆராய்ந்து, முடிவு எடுக்கப்படும்.
எமது இறுதி முடிவுகளுக்கு, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!