நாட்டு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் – கோட்டா!!

சிறந்த தீர்மானத்தை, நாட்டு மக்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில், வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல யோசனைகளை உள்ளடக்கியிருக்கிறோம்.
இதனால்தான் உங்களுக்கு உரப் பொதிகளை இலவசமாக வழங்க திட்டமிட்டிருக்கிறோம். கடன்பட்ட விவசாயிகளின் கடன்களை முழுமையாக இரத்துச் செய்வதற்கும், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்த பிரதேசத்தில் நீர்ப்பாசன பிரச்சினை இருக்கிறது. நாங்கள் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவோம். குளங்களை மீளக் கட்டியமைப்போம். இந்த அரசாங்கம் விவசாய துறைக்கு எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை.

எமது அரசாங்கத்தின் கீழ் விவசாயத்திற்கு முதலிடம்; வழங்குவோம். அதேபோல் குறைந்த செலவிலே அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய வகையிலே விவசாயிகளுக்கு உதவிகள் செய்யப்படும்.

முக்கியமாக நல்ல விதைகள், நல்ல விளைச்சலை தரக்கூடிய விதைப் பயிர்கள், உரங்கள் நீர்ப்பாசன வசதி என அனைத்தையும் நாங்கள் பெற்றுத்தருவோம்.

இங்கே வறுமையிலே வாடும் பல மக்களுக்கு, விவசாயம் செய்ய இடம் இல்லை. தெழில்நுட்ப அறிவில்லை. எனவே எமது அரசாங்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு வேலை வாய்பையேனும் நாம் பெற்றுத்தருவோம்.

நாம் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் இல்லை. யுத்தத்தை முடித்து வைத்தவர்கள். இங்கிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு, நான் ஒரு விடயத்தை கூறி வைக்க விரும்புகிறேன்.

உங்களிலே சில அரசியல் கட்சிகள், உங்களுடைய கடந்த காலத்தை கிளறுகிறார்கள். உங்களுக்கு நான் ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்குவேன்.
சுதந்திரத்திற்கு பின்னர் பல தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்;கினார்கள்.

ஆனால் செய்யக்கூடிய பல வாக்குறுதிகளை வழங்குகிறேன். எனக்கு தெரியும், இங்கிருக்கின்ற நிலைமையின்படி இந்த பிராந்தியம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இதனை அபிவிருத்தி செய்ய நாம் நடவடிக்கை எடுப்போம். எங்களுக்கு இந்த வாக்குப்பலத்தை தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நாட்டில் பல இளைஞர் யுவதிகள் மிகவும் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையை வளமாக்குவேன் என உறுதிபடக் கூறுகின்றேன்.

அந்த காலத்தில் எல்.ரி.ரியில் இருந்தவர்கள் சரணடைந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வளித்தோம். உலகிலேயே மிக சிறந்த புனர்வாழ்வு நிலையமாக இலங்கை காணப்பட்டது.

அவர்களை சமூகமயப்படுத்தினோம். அவர்களிலே பலரை சிவில் அமைப்புக்களுடன் இணைத்தோம். அதேபோல இந்த பிரதேசத்தில் எதிர்காலத்திலும் கைத்தொழில் மற்றும் தனிநபர் வழிப்படுத்தி, அவர்களுக்கான திறமைகளை வளர்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்போம்.

கடந்த அரசாங்கம் தொடர்பில், தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியில் போலியான பிரச்சாரங்கள் பரப்பட்டது. இதனையும் தமிழ் மக்கள் நம்பினார்கள்.
இதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.

போலியான குற்றச்சாட்டுக்களுக்கும், வதந்திகளுக்கும் ஏமாற்றமடைய வேண்டாம். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆயுதமாக கொண்டு, ஒரு தரப்பினர் மீண்டும் அரசியல் செய்தார்கள்.

அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை நாட்டு மக்கள் முன்னெடுக்க வேண்டும்.

என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரனமுவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், வவுனியாவில் இன்று பலத்த மழைக்கு மத்தியில் இடம்பெற்றது.

வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார். இதன் போது, கோட்டாபய ராஜபக்ச மேடைக்கு சென்ற போது, ஆதரவாளர்கள் கோசமெழுப்பி வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றினார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்தார்.

இக் கூட்டத்தில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, கே.கே.மஸ்தான், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!