ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ‘இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 30 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வன்முறை செயற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் குறைவாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் முன்னேற்றம் உள்ளதாகவும், அமைதியையும், சட்டத்தையும் நிலை நிறுத்துவதிலும் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நான்காயிரம் பேரை மேலதிக கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.(நி)