வவுனியா மணிக்கூட்டு கோபுர பகுதியில் உள்ள பிரபல உணவகத்தினால், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் இலையான் காணப்பட்டதை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்களினால், உணவத்திற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் உணவகத்திற்கு சென்ற வாடிக்கையாளர், இடியப்பக் கொத்து கோரியுள்ளார். இதன் போது, வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட இடியப்பக் கொத்தினுள், இலையான் காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து, வாடிக்கையாளர் உணவை பரிமாறிய ஊழியரிடம் இவ்விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், அந்த உணவை மீள பெற்றுக்கொண்ட உணவக ஊழியர், இலையானை வெளியேற்றி விட்டு, மீண்டும் அதே உணவை வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளார்.
ஊழியரின் செயற்பாட்டை அவதானித்த வாடிக்கையாளர், வவுனியா சுகாதார திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, உணவகத்திற்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன், உணவகத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன் போது, உணவத்தில் சுகாதார சீர்கேடும் நிலவுவதாக தெரிவித்து, உணவத்திற்கு எதிராக, பொதுச் சுகாதார பரிசோதர்களினால் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உணவகம் மீதான வழக்கு, வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (சி)