மட்டக்களப்பில் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

இலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இலஞ்சம் ஊழல் சம்பந்தமான சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இயற்றப்பட்டு நடைமுறையிலிருந்து வந்துள்ளது. இச் சட்டமானது காலத்திற்கு காலம் சிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்ட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் தெரிவிக்கையில் அதிகபடியான முறைப்பாடுகள் அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும், பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சார்பான முறைப்பாடுகள், காணி தொடர்பான பிணக்கு இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் மற்றும் அரச தொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்படுகள் தான் அதிகமாக பதிவாகி வருகின்றது என தெரிவித்தார்.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணிய மூர்த்தி மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் கணக்காளர்கள் உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள் நிரு;வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!