மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில், மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில், இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 20 ஆம் திகதி, தோட்டக் காணியை துப்பரவு செய்த போது, மனித எச்சங்கள் காணப்படுவதாக, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, புதுக்குடியிருப்பு பொலிசாரினால் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில், அகழ்வு செய்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இன்றையதினம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் போது, வெட்டப்பட்ட மண் கொட்டப்பட்ட இடத்திலும், மண் வெட்டி இடத்திலும் மேலோட்டமாக காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று எடுக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி பகுதியிலும் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மண் கொட்டப்பட்டு இருக்கின்ற பகுதியில் உள்ள மனித எச்சங்கள், விலங்குகள் மற்றும் மழை நீரினால் அடித்துச் செல்லப்படும் அபாயம் இருந்ததன் காரணமாக, உடனடியாக குறித்த மனித எச்சங்கள் இன்று எடுக்கப்பட்டதாகவும், மேலதிகமாக அகழ்வு பணிகள், நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த அகழ்வு நடவடிக்கையின் போது, நீதிமன்ற தரப்பினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!