5 தமிழ் கட்சிகளின் சந்திப்பு : 2 கட்சிகள் புறக்கணிப்பு!!

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளின் இன்றைய சந்திப்பை, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளன.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இன்றைய சந்திப்பை புறக்கணித்துள்ளன.

இன்று, வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய சந்திப்பை, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளன.

தமிழர்கள் தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து, இதன் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில், கடந்த 14 ஆம் திகதி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், 5 தமிழ்க் கட்சிகள் பொது உடன்பாட்டில் கையொப்பமிட்டன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் சார்பில், பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால்

முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில், 5 கட்சிகள் கையொப்பமிட்டன.

இதன் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டத்தில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், தமிழர்கள் தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!