மன்னாரில் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்!!

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்திற்கு முன்பாக, இன்று அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்தில், காலபோக சிறுபோகம் தொடர்பான கூட்டம், இன்று காலை இடம்பெற்ற போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது கால்நடை வளர்ப்பாளர்கள், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கட்டையடம்பன் பகுதியில், மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும், உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட பகுதியில், பெரும்போக நெற் செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருவதாகவும், மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, தற்போது விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் இடம்பெறும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக மாற்றித் தருமாறு கோரி, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது, கால்நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடிய, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ், நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் கலைந்து சென்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!