கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பான வழக்கு!!

வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்கு விசாரணையில், பிரதான சாட்சியாளர்கள் காணாமல் போனமை மற்றும் அவர்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் வைத்து வானுடன் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் இருவரது வான், திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த வானையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், கொழும்பில் வெள்ளை வானில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், விசாரணை இடம்பெற்ற போது, முன்னிலையாகிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா, இந்த வழக்கில் 10 ஆவது சந்தேக நபரான கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மீதான விசாரணைகள் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை, இந்த வழக்கில் சந்தேக நபராக அடையாளப்படுத்தி, அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய நோட்டீஸ் அனுப்புவதற்கான அனுமதியை, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா கோரினார்.

எனினும் தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுக்குமாறு, அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, கைதுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதவான், இந்த நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரமும் தற்போது இல்லை என்றும் கூறி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை நிராகரித்தார்.

அதனைத்தொடர்ந்து, கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட ஜோன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும், அவர்கள் பயணித்த வானும், கடற்படை சந்தேக நபர்களால், திருகோணமலை கடற்படை முகாமுக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட்டு, அதன் இயந்திர இலக்கம், இலக்கத்தகடு உட்பட நிறத்தையும் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளதாகவும், பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா மன்றில் தெரிவித்தார்.

இதுதவிர, இந்த நடவடிக்கைகளை அவதானித்த பிரதான சாட்சியாளரான செனவிரத்ன என்பவர், நீரில் மூழ்கி மரணித்திருப்பது குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், அது குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், நிஷாந்த டி சில்வா மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றில் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் மற்றுமொரு பிரதான சாட்சியாளரான, கடற்படையின் அதிகாரி விஜயகாந்த் என்பவர், அண்மையில் திடீரென காணாமல் போயிருப்பதாக அறியக்கிடைத்ததாகவும் தெரிவித்த, நிஷாந்த டி சில்வா மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, இவ்வாறு சாட்சிகள் காணாமல் போகின்றமை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றமைக்கு மத்தியில், பிரதான சந்தேக நபர்களுக்கு, கடற்படையில் உயரிய பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் அதிருப்தியை வெளியிட்டனர்.

இதுகுறித்து கவனம் செலுத்திய நீதவான் ரங்க திஸாநாயக்க, சாட்சிகளை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்த அதேவேளை, அதற்கான உதவிகள் தேவைப்படின், நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்க முடியும் என்றும் அறிவித்தார்.

இதற்கமைய இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றுவரை சந்தேக நபர் லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சியை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!