துரைராசா ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த வருடம் 8 ஆம் மாதம் 2 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம், தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்ற போது, நீண்ட நேரம் ஆகியும், திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டதாக, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில், முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ரவிகரன் மற்றும் 7 பேரும் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, இந்த வழக்கு விசாரணைகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், இன்றையதினமும் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன் போது, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேரும், நீதிமன்றில் முன்னிலையானதை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!