மழையால் சிரமத்துடன் வாழும் மன்னார் ஜிம்ரோ நகர் மக்கள் 

மன்னார் ஜிம்ரோநகர் மக்களுக்கு வழங்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டம் பூர்த்தியடையாத நிலையில், பருவகால மழை ஆரம்பமாகிய நிலையில், பல்வேறு சிரமங்களுடன் வாழ்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோநகர் மக்கள் வருடா வருடம் வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் இவ்வருடம் ஜிம்ரோ நகர் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து தற்காலிகமாக வசித்து வந்த வீடுகளையும் அகற்றியும் பழைய வீடுகளை கைவிட்டும், நுண் நிதி நிறுவனங்களிடமும் நகைகளை அடகுவைத்து புதிதாக வீடுகளை அமைப்பதற்கான அத்திவாரங்களை இட்டனர்.

இதன் பின்னர், சிலருக்கு முதல் கட்ட நிதியும் பலருக்கு இரண்டாம் கட்டம் வரை மாத்திரமே நிதி வழங்கப்பட்டது.

இதனால் புதிய வீடுகளை அமைக்கும் பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால், புதிய வீடுகளை அமைப்பதற்காக தமது பழைய வீடுகளை கைவிட்டவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.

அத்தோடு, வெள்ள நீர் அப்பகுதியில் சூழ்ந்துள்ள நிலையில், வெள்ளத்தினாலும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப் பகுதியில் நீண்டகாலமாக வெள்ள நீர் தேங்கி வரும் நிலையில், அவற்றை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் முன்வருவதில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள், மற்றும் முன்பள்ளிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

இதனடிப்படையில், வீடுகள் பூர்த்தி செய்யப்படாதும், வெள்ள நீரில் சிக்கியும் தவிக்கும் மக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!