ஆட்சிக்கு வந்தால் தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் – கோட்டா!!

ஜனாதிபதியாக தாம் தெரிவுசெய்யப்பட்டால் கடந்த ஆட்சியில் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மீண்டும் அமுல்படுத்துவதாக உறுதியளித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முன்பாக பாதுகாப்பையும் தாம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை – பெலியத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இன்றுடன் உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று 06 மாதங்களாகின்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு 2005ஆம் ஆண்டில் அதிகாரத்தை வழங்கிய போது இந்த நாட்டில் சவாலாக இருந்த போர், எல்லா இடங்களிலும் குண்டு வெடிப்புக்கள் என்பன இருந்தன. மீண்டும் ஆயுதப்போர் ஏற்படாத வகையில் புலனாய்வுப் பிரிவு, படையினரை நாங்கள் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனால்தான் எமது காலத்தில் தீவிரவாதம் தலைதூக்கவில்லை.

இனத் தீவிரவாதம் ஏற்படாத வகையில் குழுக்களை நியமித்து செயற்பட்டிருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்புக்கு அக்கறை செலுத்தவில்லை. இந்த அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் தேசிய பாதுகாப்பு பற்றிய விளக்கம் இருக்கவில்லை. அதனால் போரை வெற்றிகொண்ட படையினரது மனங்களை அரசாங்கம் உடைத்தது. எமது பாதுகாப்பு வேலைத் திட்டங்களையும் இரத்து செய்தது.

புலனாய்வு அதிகாரிகளை போலியான குற்றச்சாட்டுக்களின் மூலம் சிறைதள்ளியது. சர்வதேசத்திற்கு சென்று சர்வதேச நீதிமன்றில் எமது படையினரை நிறுத்துவதற்கும் முயற்சி செய்தது. அதனால்தான் மீண்டும் தீவிரவாதம் இந்த நாட்டில் தலைதூக்கியது. தேசிய பாதுகாப்பு குறித்த துளியளவேணும் அறிவில்லாத அரசாங்கத்திற்கு மீண்டும் ஆட்சிக்குவர முடியாது.

இந்த நாட்டிலிருந்த தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த எங்களால் மட்டுமே அந்த சவாலை முறியடிக்க முடியும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறப்பான வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி புலனாய்வுப் பிரிவுக்கு சட்டப்பாதுகாப்பை வழங்கி பாதுகாப்பான நாடாக மாற்றுவேன்.

நான் ஏற்றுக்கொண்ட அனைத்து கடமைகளையும் சரிவர நிறைவேற்றினேன். பாதுகாப்புச் செயலாளரான நான் இரண்டரை வருடங்களில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக படையினர், புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸாரை ஒருங்கிணைக்க முடிந்தது.

போர் முடிந்த பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கொழும்பு நகரை அபிவிருத்தி செய்தேன். ஆகவே மக்களின் கடமைகளை நிறைவேற்ற நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்’ என்றார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!