கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு  

கிளிநொச்சி, ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ஆம் கட்டை பகுதியின் ஏ-9 வீதியில் நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வான் ஒன்றில் பயணித்த ஐவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியை சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவது ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய வான் மூன்று முறை தடம்புரண்டதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வீதியின் ஓரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் ஆபத்தானதாக அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!