இலங்கைக்கு ஜனநாயக நாடுகள் பாராட்டு 

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த தேர்தல் அமைதியான ஜனநாயகமிக்க, ஊழல், மோசடியற்ற தேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் முப்படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், தேர்தல் காலங்களில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் துறையினருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது குறிப்பாக நெடுஞ்சலைகள் அபிவிருத்தி, நீர் மாசடைதலை தடுப்பதற்கான செயற்திட்டங்கள், கிராமிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களுக்காக நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அண்மையில் பொலன்னறுவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகளையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

இலங்கையின் திரவ பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அத்துறை தொடர்பில் நிபுணத்துவமுடைய நெதர்லாந்தின் பங்களிப்பை மென்மேலும் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின்போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.

இச்சந்திப்பில் நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசியாவிற்கான பிரதான அதிகாரி, இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் உள்ளிட்டோரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!