இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டை சூழவுள்ள ஏனையகடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10 தொடக்கம் 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் குறித்த கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகின்றது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!