சிறுபாண்மைக் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் – இராதாகிருஷ்ணன்!!

மலையகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும், கொள்கை ரீதியாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் இதுவாகும் என, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றாக முன்நோக்கி செல்வோம் எனும் தொனிப்பொருளில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக, மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம், நுவரெலியா மஸ்கெலியாவில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று, அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணி நிதி செயலாளர் விஷ்வநாதன் புஸ்பா, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களான ராஜ் அசோக், ராஜ்குமார், ஆனந்தன், சுப்பிரமணியம், யோகேந்திரன், ரவீந்திரன், திருமதி. ரஞ்சனி உட்பட பொது மக்களும் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலில் சிறுபான்மை மக்கள் பேரம் பேசும் சக்தியை படிப்படியாக இழந்து வருகின்றார்கள். அது முஸ்லிம்களாக இருந்தாலும சரி தமிழர்களாக இருந்தாலும் சரி ஒரே நிலை தான்.

இன்று பெரும்பான்மை கட்சிகளின் எண்ணமெல்லாம் அதிகமான பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

அதற்காக இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இது ஒரு காத்தரமான செயல்பாடு அல்ல. இதனை தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் புரிந்த கொள்ள வேண்டும்.

அன்று சௌமிய மூர்த்தி தொண்டமானும், அஷ்ரப்பும் தூர நோக்கு சிந்தனையோடு செயல்பட்டார்கள். இதன் மூலம் பல வெற்றிகளை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இன்று மூஸ்லிம்களும், தமிழர்களும் கட்சி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து நின்று செயல்படுவதை காண முடிகின்றது. இது எமக்கு ஆரோக்கியமான செயல்பாடு அல்ல.

இந்த நாட்டில் நாங்களும் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியின் பின்பு பாடசலைகளுக்கு சத்துணவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!