பன்சியகமவில், புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!!

பொல்பித்திகம பிரிவின் பன்சியகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழா, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன தலைமையில், நேற்று நடைபெற்றது.

நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து, வட மேல் மாகாண ஆளுநர், நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில், பிரதேச மகாசங்கத்தினர், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, குருணாகல் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்த்தன, நிக்கவரட்டிய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க ஆகியோரும் பொல்பித்திகம பிரதேச சபையின் தவிசாளர், பொல்பித்திகம பிரதேச செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொது மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் செயற்திட்டத்தில், இலங்கையில் 498 ஆவது பொலிஸ் நிலையமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பிரதேச மக்கள் பொலிஸாரின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பெரும் பண செலவில் 30 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பொல்பித்திகம பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கலேவல, வாரியபொல மற்றும் கொக்கரெல்ல பொலிஸ் நிலையங்களுக்கோ செல்ல வேண்டியிருந்தது.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக, புதிய பொலிஸ் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிர்வாகப் பிரிவு, குற்றவியல் தடுப்பு பிரிவு, சிறிய குற்றங்களுக்கான முறைப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் நிலையத்திற்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக, புதிய பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!