இலவசக் கல்வி ஆய்வு நிறுவகம், விரைவில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!!

இலவசக் கல்வி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில், அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்விக் கொள்கை மற்றும் கோட்பாடு என்ன என்பது தொடர்பில், சமூகத்திற்கு சரியான புரிந்துணர்வை வழங்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியின் தந்தையாக போற்றப்படும், இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சரான அமரர் கன்னங்கராவின் 50 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு, நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

50 வருடங்கள் கடந்த பின்னரும், அமரர் கன்னங்கரா நினைவு கூரப்படுவதற்கு, இன்றைய அரசியலில் அத்தகைய உன்னத நபர்களின் தேவைப்பாடு அதிகமாக காணப்படுவதே காரணமாகும்.

சுமார் 40 வருடங்களாக, இந்நாட்டு அரசியல் முறையற்ற நபர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இலவசக் கல்வி அபிவிருத்தி மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் பேசப்படும் இந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில், குறைந்தது 25 பேராவது அமரர் கன்னங்கராவை போன்றவர்களாக இருப்பின், எமது நாடு இன்னும் வெகுதூரம் முன்னேறி இருக்கும்.

இதனால் இலவசக் கல்வி தொடர்பில் பேசுவதைப் போன்றே, சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கரா போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வது, புதிய அரசியல்வாதிகளுக்கு முக்கியமாகும்.
என குறிப்பிட்டார்.

இலவசக் கல்வியின் தந்தையாக போற்றப்படும், இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சரான அமரர் சி.டப்ளியு.டப்ளியு. கன்னங்கராவின் 50 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்றது.

களனி பல்கலைக்கழகத்தின், தேசிய மின் கற்றல் வள மையம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கன்னங்கராவினால் 1945 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க இலவசக் கல்விச் சட்டம், எமது நாட்டிலும் வெளிநாட்டிலும் அமரர் கன்னங்கரா ஆற்றிய உரைகள் மற்றும் கடிதங்கள் அடங்கிய ‘இலவசக் கல்வியின் முன்னோடி’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

‘கன்னங்கராவின் செயற்பணிகளும் எதிர்கால சவால்களும்’ எனும் தொனிப்பொருளில், களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச பிரதான உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், களனி பல்கலைக்கழக சிங்கள கற்கைப் பிரிவின் பீடாதிபதி பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் பேராசிரியர் வண. மல்வானை சந்திரரத்ன நாயக்க தேரர், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பல்கலைக்கழக உபவேந்தர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்களும், திருமதி அசித்தா பாலசூரிய உள்ளிட்ட அமரர் கன்னங்கராவின் பேரப்பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!