நாமல் ராஜபக்ஸ கிளிநொச்சிக்கு விஜயம்!!

கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர் ஓய்வு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பில், மீனவர்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து சந்திப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வாக்குறுதி அளித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள, செஞ்சோலை சிறுவர் இல்ல காணி விடயம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில், நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

இதன் போது, சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவு ஒன்றை தாம் பெற்று தருவதாக, உறுதி மொழி வழங்கினார்.

அத்துடன், குடும்பங்களின் வாழ்க்கை முறைகள் தொடர்பிலும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டார்.

இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம் என தெரிவித்தார்.

இரணைமடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி, எனது தந்தையார் ஜனாதிபதியாக இருந்த போது, எனது முயற்சியினால் விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட அன்றிலிருந்து குறித்த பகுதி எவ்வித முன்னேற்றத்தையும் அடையவில்லை.

இன்றும் அங்கு செல்லும் வீதிகள் உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சினைகளுடனேயே மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க புதிய அரசை பெற்றுக்கொண்டதும் நடவடிக்கை எடுப்போம்.
என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!