‘நாட்டின் இறைமையை காப்பாற்ற வேண்டும் : கோட்டபாய!!

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்துள்ள தற்போதைய அரசாங்கத்தினால், நாட்டின் இறைமையை பாதூக்க முடியாது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாட்டில், தேசிய அமைப்பு மாநாடு கொழும்பில் நடத்தப்பட்ட வேளை, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் இறையாண்மைக்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விசேடமாக தேசிய இனம், பிக்குமார்கள் மற்றும் நாட்டிற்கான உழைத்த இராணுவ சிப்பாய்கள் அதனை எதிர்கொண்டுள்ளனர்.

எமது கலாசாரம் கடந்த காலங்களாக பெரு வீழ்ச்சியை கண்டுள்ளது. அதற்கான காரணங்கள், இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.

இராணுவத்தினர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, விசாரணை செய்தமை, எந்தவொரு அடிப்படை விடயங்களற்ற நிலையிலும் பிக்குமார்களை கைது செய்து சிறை தள்ளியமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எமது நாட்டின் அபிமானத்தையே சிதைக்கின்ற முயற்சிகளே இடம்பெற்றன.

இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்ற தருணம்தான் இது. பல்வேறு தேசிய சக்திகளினால் வழிநடத்தப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களால், எந்தவொரு பயமும் இன்றி, பிக்குமார்களையும், இராணுவத்தினரையும் அவமானப்படுத்துதல் போன்ற சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

30 வருட கால போரை முடிவுக்கு கொண்டுவந்ததை அடுத்து, தேசிய அபிமானத்தை நாட்டில் ஏற்படுத்தினோம்.
போர் வெற்றியை முன்னிட்டு, நாட்டில் பேரணிகளை செய்தோம்.

அது வெறுமனே பேரணிகள் அல்ல, மாறாக இளைஞர்கள் சமுதாயத்தில் நாட்டின் அபிமானத்தை ஏற்படுத்துவதற்காக அதனை செய்தோம்.

அந்த காலகட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, இராணுவத்தினரை விமர்சனம் செய்யும் பல்வேறு விடயங்களை, சரத் வீரசேகர என்னிடம் காண்பித்தார்.

அதற்காக இராணுவச் சிப்பாய்களை நாங்கள் மக்களிடம் அறிமுகப்படுத்தவே, மிலிட்டரி சிப்பாய்கள் என்றவர்களை இராணுவச் சிப்பாய்கள் என்று பெயர் மாற்றினோம்.

ஆகவே இந்த இராணுவத்தினரை அவமானப்படுத்தும் உள்நோக்கமானது, இளைஞர் சமுதாயத்திலிருந்து அவர்களை தூரப்படுத்துவதாகும்.

இந்த புதிய லிபரல்வாத யோசனை அடங்கிய, அமைச்சரவை மற்றும் வெளிநாட்டு சக்திகளால் நடத்தப்படும்;, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிகின்ற அரசாங்கத்தினால், இவற்றை செய்வது ஒன்றும் புதியதல்ல. இவர்களின் ஆட்சி இருக்கும் வரை இப்படியான சவால்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இந்த நாடு எதிர்கொள்ளும் சவால்களை வென்றுகொண்டு எமது இறைமை, கலாசாரம் என்பவற்றை பாதுகாக்கவே நான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளேன்.

பிக்குமார்கள், மகாநாயக்க தேரர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அபிலாஷைகளை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!