வாக்கு சேகரிக்கும் நோக்கிலேயே பெரமுன செயற்படுகிறது – மனுஷ!!

தனி ஈழத்தை எதிர்க்கும் தரப்பினரையும், அதேபோல தனி ஈழத்தை அமைத்த தரப்பினரையும், வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி கேட்டப்பட்டது.

அதன்போது அது தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல என்றும், அப்போது இராணுவத்தளபதியாக இருந்தவரிடமே கேட்க வேண்டும் என்றும் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்தார். இராணுவத்தை தான் வழிநடத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.

போர் வெற்றி மற்றும் போரை வழிநடத்தியவர்கள்தான் ராஜபக்சவினர். ஆனால் போரில் சரணடைந்தவர்கள் மற்றும் உள்ளக விடயங்களைக் கேட்கின்ற போது, இராணுவத்தை தாம் வழிநடத்தவில்லை என்றும் அதனை இராணுவத் தளபதியிடமே கேட்க வேண்டும் எனவும் கேள்வியிலிருந்து நழுவிச்சென்றார்.

போர் வெற்றி குறித்து அவர்கள் எல்லா நேரங்களிலும் பேசினாலும், தேசிய பாதுகாப்பு குறித்து பேசினாலும் சரத் பொன்சேகாதான் போரினை வழிநடத்தினார் என்றும், அவரே இராணுவத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் தலைமை தாங்கினார் எனவும், கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆகவே கோட்டபாய ராஜபக்ச கூறுவது போல, தேசிய பாதுகாப்பு விவகாரத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக, சஜித் பிரேமதாஸ நேற்றும் கூறியுள்ளார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னிடம் கேட்கப்படுகின்ற கேள்வியில் சிரித்துக்கொண்டே நழுவுவது மற்றும் தனது வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்த முடியாத வேட்பாளர் ஒருவரையே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிறுத்தியிருக்கின்றது.

இனவாத சொரூபத்தை எப்போதுமே இவர்கள் தரித்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் சர்வதேச கொள்கைகளுக்கு எமது நாடு அடிபணிந்து விட்டதாக, அமெரிக்கப் பிரஜை ஒருவரே அடிக்கடி கூறி வருகின்றார்.

அமெரிக்கப் பிரஜை குறித்து எமக்கு சந்தேகம் இருக்கிறது. கடந்த காலங்களாக போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அப்போது பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தலைமை அதிகாரிகள் பலருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த போது, அமெரிக்கத் தூதரகம், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பை வெளியிட்டது.

அன்று பிரிகேடியராக கடமையாற்றிய ஒருவர், இன்று இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் போது எதிர்ப்பு முன்வைக்கப்படுகின்றது.

அன்று பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச, இன்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்ற போது, அந்த மனித உரிமைப் பேரவையும், அமெரிக்காவும் சர்வதேச அமைப்புக்களும் கேள்விகளையோ எதிர்பினையோ வெளியிடுவது இல்லையே.

ஏன்? அவர் அமெரிக்கப் பிரஜையானதாலா? ஒருபுறத்தில் பௌத்தத் தன்மை, சிங்களத்துவம் தேசிய பாதுகாப்பு என்று கூறும் இவர்களிடையே, கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் அவர்களுடன் சண்டையிட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இருக்கின்றார்.

இதுதான் இவர்களுடைய ஐக்கியம். மருத்துவர் சாபியின் விடயம் குறித்து முகப்புத்தகத்தில் ஒரு பதிவைக் கண்டேன்.

அதில், போரில் சண்டையிட்ட கருணா, பிள்ளையான் அவர்களுடன் இருக்கின்ற அதேவேளை, அவர்களை எதிர்த்து போரிட்ட கமல் குணரத்னவும் உள்ளார்.

மருத்துவர் சாபிக்கு எதிராக செயற்பட்ட சந்திர ஜயசூரியவும் இருப்பதோடு, அதற்கெதிராக குரல் கொடுத்த அலிசப்ரியும் உள்ளார்.

சரியா பல்கலைக்கழகத்தை மூடுமாறு கோரிய ரத்ன தேரரும் இருக்கும் பக்கத்திலேயே, அப்பல்கலைக்கழகத்தை அமைத்த ஹிஸ்புல்லாவும் அமர்ந்துள்ளார்.

வஹாப் வாதத்தை விஸ்தரித்த அப்துல் ராஸிக், அவர்களுடன் இருக்கும் அதேவேளை, அதற்கெதிராக குரல் கொடுக்கும் விமல் வீரவன்ச இருக்கின்றார்.

தனிச் சிங்கள நாட்டை உருவாக்குகின்ற நலின் சில்வா இருக்கும் அதே இடத்தில், தனி ஈழத்தை அமைத்த வரதராஜப் பெருமாளும் உள்ளார். வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறு பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

ஒரே மேடையில் இவர்களை திரட்டியதற்கு என்ன காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!