கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்;, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இன்று திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதுடன், நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து, ஆலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நாடளாவிய ரீதியில், தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்ட தேவாலயங்கள், அரசாங்கத்தினால் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புனரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நேற்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில், இன்று 10.00 மணிக்கு, தமிழ் – சிங்கள மொழிகளில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழாத் திருப்பலியை, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இதேவேளை, இன்று புனித அந்தோனியாரின் திருவிழா, உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.(சி)