தமிழ் கட்சிகள் – பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சிகளை பொது நிலைப்பாடொன்றை எடுக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான நான்காவது சந்திப்பு யாழ்ப்பாணத்தில் தற்போதுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள தனியார் விடுதியொன்றில் குறித்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், ஈ.பீ.ஆர்.எல்.எவ்சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன் ஆகியோரும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளான சின்மயா மிஷன் வதிவிட சுவாமிகள் சிதாகாசானந்தா, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

பிற்பகல் 05.30 மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு, நீண்ட மணி நேரமாக வாதப்பிரதிவாதங்களுடன் தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!