பொது எதிரியை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணையவேண்டும்:மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு 

இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை இனங்கண்டு, அந்தத் தரப்பினரை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலன்னறுவையில், இடம்பெற்ற பௌத்த மதகுருமார்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இந்த தேர்தல் காலத்தில், மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியது மதகுருமார்களின் கடமையாகும்.

ஆனால், மதஸ்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாது என தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படியானால், மதகுருமார் எங்கு சென்று மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்வார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், நாட்டிலுள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக மதகுருமார்கள் நன்கு அறிவார்கள்.
மக்களுக்கு உள்ள பிரச்சினையை மதகுருமார்கள் உணர்வார்கள்.
அன்று இருந்த நிலைமை நாட்டில் இருக்கவில்லை.

மக்களின் கைகளில் இன்று பணமில்லை.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வியாபாரிகளுக்கு வர்த்தகம் செய்ய முடியாதுள்ளது.

இதனையெல்லாம் மக்கள் அமைதியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எமது காலங்களில் எல்லாம், இவ்வாறு இடம்பெற்றால் போராட்டங்களை மேற்கொண்டிருப்பார்கள்.

ஆனால், இன்று மக்கள் அனைவரும் தேர்தல் வரும்வரைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாக்காளர்கள் முட்டாள்கள் இல்லை.

இதன் விளைவைத்தான் நாம் எல்பிட்டிய தேர்தலில் பார்த்தோம்.

சஜித் பிரேமதாச, வேட்பாளராக களமிறக்கப்பட்டதை அடுத்து, அந்தத் தரப்பினர் பெற்றுக்கொண்ட முதலாவது தோல்வியாகவே இதனை நாம் கருதுகிறோம்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து ஒரே பயணத்தை மேற்கொள்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான எமது இந்தப் போராட்டம் தொடரும்.

பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெறுவது முக்கியமானதல்ல.
எமது இலக்கு ஜனாதிபதி தேர்தலே.

இந்த தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் மக்களுக்கான ஆட்சியை வழங்குவதே எமது இலக்காகும்.

எனவே, அனைவருக்கும் பொதுவான எதிரி யார் என்பதை உணர்ந்து, அந்தத் தரப்பை தோற்கடிக்க வேண்டும்.

இதற்காக ஜனாதிபதித் தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!