இனவாத அரசியல் தேச துரோகம் – சஜித்!!

இனவாதம் மதவாதம் பரப்புவதன் மூலமாக, அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது நாட்டுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இக்கருத்தை வெளியிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு இனவாதம் மதவாதம் பரப்புவதன் மூலமாக, அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது இந்த நாட்டுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

இந்த நாட்டில் சிங்கள மக்களை போலவே, தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் அரவணைப்பையும் பெற்றுக்கொண்டு முன்நகர வேண்டும்.

இல்லையேல் நாடு தீப்பற்றி எரியும். சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு முறையை தூண்டி, குழப்பங்களை ஏற்படுத்தி, அதன் மூலமாக அதிரத்தை கைப்பற்ற நினைப்பது தேசத்துரோக செயலாகும்.

இனவாதம் மதவாதத்தை தூண்டி, அதன் மூலம் இந்த நாட்டில் மீண்டுமொரு கருப்பு ஜூலை கலவரம் உருவாகினால், அதன் மூலமாக நாம் சர்வதேச தரப்பிடம் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டால் எமது நாட்டுக்கு நடப்பது என்ன?

தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் நிலை என்ன?

ஒரு சிறு குழு தவறு செய்த காரணத்தினால், ஒரு இனத்தை நாசமாக்க எமக்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, இந்த நாட்டுக்கு எதிரான சக்திகள் உருவாகினால், தேசிய பாதுகாப்பு விடயத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் முன்வருவோம்.

ஆனால் பொய்யான காரணிகளை கூறி, ஒரு இனத்தை அடக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நான் எப்போதுமே இந்த மண்ணை நேசிக்கும் நபர். இந்த நாட்டை போலவே, இந்த நட்டு மக்களையும் நான் நேசிக்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் வாழும் மக்கள் வாழ்வாதார ரீதியில் பாரிய அழுத்தங்களை சந்திக்கின்றார்கள்.
அதை நன்றாக நான் உணர்கின்றேன்.

எனினும் இந்த ஜனாதிபதி தேர்தலில், எமது அரசாங்கம் உருவானதும், உடனடியாக வாழ்வாதார பிரச்சினைக்கு நான் தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

மக்கள் வாழும் உரிமையை நான் பெற்றுக்கொடுப்பேன். நான் எப்போதும் மக்களை அழுத்தத்திற்கு தள்ளும் முடிவுகளை எடுக்க மாட்டேன்.

மக்களை கொலை செய்து ஆட்சி செய்ய நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கேட்ட மக்களை கொன்றவர்களும், வீடுகள் கேட்டவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த ஆட்சியாளர்கள் தான் இன்று மீண்டும் தேர்தலில் போட்டியிட வந்துள்ளனர்.

அவர்களுக்கு இனியும் இடமளிக்க முடியாது. என்னிடம் எப்போதும் மக்களை பாதுகாத்தல், கட்டியெழுப்பும் கொள்கையே உள்ளது.

புதிய பாதையில் நவீன தொழில்நுட்ப இலங்கையை நான் உருவாக்கிக்காட்டுவேன். ஒரு நாட்டின் தலைவராக வர வேண்டியவன், நாட்டில் சகல மக்களையும் சந்தித்து அனைவர் முன்னிலையிலும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
அதனை நான் செய்து வருகின்றேன்.

நாட்டினை ஆட்சி செய்வது என்பது இயந்திர ஆட்சியோ இராணுவ ஆட்சியோ அல்ல. மக்கள் முன்னிலையில் சென்று அவர்களின் நிலைமையை அறிந்து, அவர்களுக்கு சேவை செய்யும் ஆட்சியை செய்ய வேண்டும்.
அந்த தகுதி என்னிடம் உள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!