கிளி, இரணைதீவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!!

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை, நேற்று நடத்தப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை, நேற்று ஏற்பாடு இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம், 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியில் இருந்து, அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.

அதனடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும், மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும், இரணைதீவு மக்களுடன் இணைந்து, கடந்த பெப்ரவரி மாதம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம், முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த 01-03-2019 அன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள், காணி விடுவிப்பு, போக்குவரத்து, சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

இதன் காரணமாக, இரணைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை பிரச்சினைகளை, நேரடியாக தீர்த்து வைக்கும் முகமாக, நடமாடும் சேவை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நடமாடும் சேவைக்காக, 16 அரச நிறுவனங்கள் அழைத்து வரப்பட்டதாகவும், அவற்றின் ஊடாக, மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

நடமாடும் சேவையில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர், திணைக்கள அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவுகள் சார் அதிகாரிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இரணைதீவு பகுதியில், இயற்கை வளங்கள் சூரையாடப்படுவதாகவும், பொலிசாரிடம், பிரதேச மக்கள் நடமாடும் சேவையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

மணல், கற்றாளை, மாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வேறு நபர்களால் சூரையாடப்படுவதாகவும், குறித்த நடவடிக்கையை கட்டுப்படுத்த, பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது, அப்பகுதியில் கடற்படை உத்தியோகத்தர் ஒருவரினால், மக்களின் செயற்பாடுகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில், யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜா, குறித்த உத்தியோகஸ்தரை அழைத்து, விசாரணை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், கடற்படை உத்தியோகத்தர், நடமாடும் சேவை நடத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!