அம்பாறை, அட்டாளைச்சேனையில் பொலிசாரால் பதற்றம்!!

அம்பாறை அட்டாளைச்சேனையில் இன்று நடைபெறவிருந்த, அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வினை, பொலிஸார் தடுத்து நிறுத்தியதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொலிஸாரிடம் உண்மை விடயத்தை எடுத்துக் கூறிய போதும், அது வெற்றி அளிக்கவில்லை.

இதனையடுத்து அவர்கள் பாதையோரம் தரையில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள இத்தருனத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட காணி உரிமையாளர்கள் கலந்து கொள்ளவிருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர்கள் சார்பான வாக்குறுதிகள் வழங்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து அது தேர்தல் சட்டத்திற்கு முறனானதாக அமையும் என்பதால் அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பணிப்புரைக்கமைய பொலிஸாரினால் இதனை தடுத்து நிறுத்தியதாக தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புகள் அமைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் 4,652 குடும்பங்களினது 14,127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்புக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கே.நிஹால் அஹமட் இதன் பொது தெரிவித்தார்.

அதனடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மைகளை ஆவண ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்து, காணிகளை இழந்த மக்களின் உரிமைக்காக கைகோர்த்து எமது செயணி செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் ஒரு கட்டமாக, மேற்படி காணி உரிமைக்கான பொறுப்புக்கூறல் நிகழ்வில், குறித்த ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பான ஆவணப் படத்தையும் திரையிடத் திட்டமிட்டிருந்த வேளையில் இதனை விரும்பாத சில தீய சக்திகள் பிழையான தகவல்களை வழங்கி எமது நிகழ்வினை தடைசெய்திருப்பது எமக்கு மட்டுமல்லாது, அம்பாறை மாவட்டத்தில் காணிகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ஏமாற்றத்தையும், கவலையும் அளித்துள்ளது என்றார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!