வவுனியாவில், எரிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா சின்னப்புதுக்குளத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கோவில்குளம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நின்ற குறித்த குடும்பஸ்தர், வவுனியா நகருக்கு ஒருவரை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 6.30 மணியளவில் சென்ற பின்னர் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, அவரது குடும்பத்தினரினால், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பொலிஸார் குறித்த நபரைத் தேடி தகவல்களை சேகரித்த நிலையில், காணாமல் போனவரது தொலைபேசி தரவின் அடிப்படையில் இறுதியாக அவர் கள்ளிக்குளத்தில் நின்றமை தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் அங்கு பொலிஸார் நடாத்திய தேடுதலில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியிலிருந்த பெற்றோலை ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!