மாமல்லபுரத்தில் சந்திக்கும் மோடி மற்றும் ஜின்பிங்

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பு, இரு நாடுகளிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் இந்த சந்திப்பு குறித்த தகவல்களே அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்தியாவும் சீனாவும் முக்கியமான அண்டை நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளுமாகும். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே கடந்த ஆண்டு வூகன் நகரில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் இரு நாடுகளும் ஒத்துழைப்பை சீராக முன்னெடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகளுக்கும் முறையாக தீர்வு காணப்பட்டு வருகின்றன என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பானது பொதுவாக இரு நாட்டு தலைவர்களுக்கும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் சுதந்திரமாக கலந்துரையாடுவதற்கான சூழலை அமைத்து தரும். கடந்த ஆண்டு மத்திய சீனாவின் வூகன் பகுதியில் உள்ள ஹூபை மாகாணத்தில் நடந்த சந்திப்பு இரு தரப்பு உறவுகள், உலகளாவிய நிலைமைகள் குறித்து பேச ஓர் வாய்ப்பை வழங்கியது.

அதைப்போல தென்னிந்தியாவின் சென்னையில் (மாமல்லபுரம்) நடைபெற உள்ள மோடி-ஜின்பிங் சந்திப்பும் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும். குறிப்பாக, இரு தரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும்.

இரு நாட்டிற்கும் இடையே எல்லை பிரச்சினை உள்ளிட்ட தொன்று தொட்ட பிரச்சினைகள் இருந்தாலும், வூகன் சந்திப்பு இரு நாட்டு உறவுகளை திறப்பதற்கான புதிய தொடக்க புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் நடைபெற உள்ள மோடி-ஜின்பிங் சந்திப்பு இரு தரப்பு உறவை நிச்சயமாக வலுப்படுத்தும். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!