ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றன : கொதிக்கின்றார் அத்தநாயக்க!!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பவடுவதாக தெரிவித்து, ஐக்கிய தேசிய முன்னணி, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில், சில அரச மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஒரு சில அரச மற்றும் தனியார் ஊடகங்கள், பிரதான வேட்பாளர்களாக முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்து, கொழும்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில், திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க….

ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்ற நிரூபங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி, சில ஊடகங்கள் செயற்படுகின்றன.

அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களிலும் இந்தக் குறைப்பாடுகள் உள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு கோரப்பட்டு முடிந்த நிலையில், வேட்பாளர்களுக்கு சம அளவிலான ஒளிபரப்பு சந்தர்ப்பம் வழங்கப்படாமை, செய்திகள், நேர்காணல்கள், விவாதங்களில் சமமான நேரங்கள் வழங்கப்படாமை மற்றும் நபர்களின் தெரிவுகள் குறித்து, நியாயமற்ற செயற்பாடுகளை ஊடகங்கள் பின்பற்றுகின்றன. எனவே இது குறித்து கவனம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம்.

ஆரம்பத்திலேயே இவ்வாறான குழறுபடிகள் ஏற்படுவதால், அநீதி ஏற்படுகின்ற வேட்பாளர்கள், குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அநீதி ஏற்படும் விதமாகவும், சில ஊடகங்கள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 14 நாட்களில், ஊடகங்கள், வானொலிகள் வெளியிட்ட செய்திகள், வாதங்கள் குறித்து விசாரணை நடத்தும்படி, இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம்.

இதற்கமைய எடுக்கப்படுகின்ற நடவடிக்கையின் பிரகாரம், நாங்கள் சட்ட நடவடிக்கை கூட எதிர்காலத்தில் எடுப்பதற்கு ஆலோசித்து வருகின்றோம்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!