நுவரெலியா பொகவந்தலாவயில் அடை மழை – மக்கள் பாதிப்பு!!

நுவரெலியா பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக, பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால், 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அந்தவகையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் நேற்று மாலை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லை எனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குடியிருப்பில் வசித்து வந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில், மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன், வீடும் பகுதியளவு சேதமாகியுள்ளது.

நேற்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் சுய தொழிலுக்காக 15 கோழிகளை வளர்த்துள்ளனர். மண்மேடு சரிந்து விழுந்த வீட்டின் பின்பகுதியில், இந்த கோழிகள் பட்டிகள் ஊடாக வளர்க்கப்பட்டுள்ளது. அப்பட்டியின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 15 கோழிகள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளன.

அதேவேளை, அந்த வீட்டின் பகுதியளவு சேதமடைந்திருப்பதால், அவ்வீட்டில் வசிக்கும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் உள்ள 11 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!